வரி அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – வீரசுமன வீரசிங்க

174 0

அரசாங்கத்தினதும்,அரச தலைவரினதும் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீரமைப்பதற்கு நாட்டு மக்கள் மீது ஒரே கட்டமாக வரி அதிகரிக்கும் போது அதனால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் நாட்டை மீட்டெடுக்க எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.நாட்டு மக்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானங்களுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது.

அரசாங்கத்தினதும்,அரச தலைவரினதும் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீரமைப்பதற்கு நாட்டு மக்கள் மீது ஒரே கட்டமாக வரி அதிகரிக்கும் போது அதனால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தமது குடும்ப தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே நாட்டு மக்கள் மீது தொடர்ந்து சுமை சுமத்தாமல்  வரி அறவிட வேண்டிய தரப்பினரிடமிருந்து வரிகளை முறையாக அறவிட அரசாங்கம் இனியாவது கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வருடத்தின் ஏழு மாத காலப்பகுதியில் மாத்திரம் 773 மில்லியன் ரூபா வரியை பல நிறுவனங்கள் செலுத்த தவறியுள்ளதாக தேசிய இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது,

ஆகவே இந்த வரியை பெற்றுக்கொண்டால் நாட்டு மக்கள் மீது நியாயமற்ற வகையில் வரி விதிக்க வேண்டிய தேவை எழாது.

2019 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு தரப்பினருக்கு சார்பாக வரி சலுகை வழங்கியது.இதனால் 1670 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரச வருமானத்தை அரசாங்கம் இழந்தது,

ஆகவே இழக்கப்பட்ட இந்த வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஆனால் இதுவரை இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை.

வெளிநாட்டு கையிருப்பு மோசடியால் அரசாங்கம் வருடாந்தம் பல பில்லியன் டொலர்களை இழப்பதாக குறிப்பிடப்படுகிறது,ஆகவே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.