ஆசிரியரே இல்லாத ஆதிதிராவிடர் பள்ளி: கல்வி கற்க முடியாமல் 104 மாணவ, மாணவிகள் அவதி

76 0

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒரே வளாகத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளியில் 104 மாணவ, மாணவிகளும், உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் சேர்த்து 375-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

தொடக்கப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்த ஆசிரியரும் இல்லை. இதனால் உயர்நிலைப் பள்ளி நிர்வாகமே தற்காலிக ஆசிரியரை நிமித்தும், விடுதி பொறுப்பாளரைக் கொண்டும் பள்ளியை நடத்தி வருவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மொத்த மாணவர்கள் 104 பேரையும் ஒரே அறையில் வைத்து அவ்வப்போது பாடம் நடத்துவதாகவும் பெற்றோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேலும் முறையான சமையல் கூடம், சுற்றுச் சுவர் இல்லை. கழிவறையும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியில் ஈடுபடும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் ஆசிரியர்களே அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே, போதிய ஆசிரியர்கள், ஊழியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த பெற்றோர் வலியுறுத்தினர்.