விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

250 0

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்  விக்னேஸ்வரன் எங்களுடைய கொள்கையுடன் உடன்பட்டு  செயற்படும்வரை அவரை தமிழ் மக்களின் மாற்று தலைமையாக ஏற்று செயற்படத் தயார். அதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடம் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை தொடர்சியாக மக்களுக்கு சுட்டி காட்டியது நாங்கள்தான்.

தேசம், இறைமை என்ற அடிப்படையிலேயே  தமிழ் மக்களுக்குரிய தீர்வுத் திட்டம் அமைய வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அதே போலவே தமிழ் மக்கள்  பேரவையினுடைய தீர்வுத் திட்டமும் அமைந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மட்டுமே சமஸ்டி இறைமை போன்ற வசனங்களை பேசி தமிழ் மக்களுக்கு பச்சை துரோகம் இழைக்கின்றது. இதனாலேயே தமிழ் மக்களிடம் இருந்து தம்மை பாதுகாப்பதற்காகவே அதிரடி படையினரின் பாதுகாப்பை நாடியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சிங்களத் தலைவர்கள்  முன்னிலையில் ஒரு கதையையும், தமிழ் மக்கள் முன்னிலையில் இன்னொரு கதையையும் கதைக்கின்றனர். இவ்வாறான மோசடிகளில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்கின்றோம். காப்பாற்றுகின்ற வேலைத் திட்டத்தில் கொள்கையின் அடிப்படையில்  வேறு தலைமைகளும் செயற்படத் தயார் என்றால் அவர்களையும் இணைத்து பயணிக்க தயார். தமிழ் மக்கள் பேரவையில்  கூட்டமைப்பில் இருக்கின்ற சில  தலைமைகளுடன் கொள்கை அடிப்படையில் இணைந்தே செயற்படுகிறோம். ஆயினும் பேரவை அரசியல் கட்சியாக ஒருபோதும் செயற்படாது.

எழுக தமிழானது தமிழ் மக்களினுடைய ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமிழ் பேரவை அரசியல் கட்சியாக இல்லாதபோதும் பேரவையில் த.தே.கூ அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தாம் பிழையான பாதையில் பயணிப்பதை அறிந்தே பேரவைக்குள் வந்திருக்கின்றனர். எனவே இவர்கள் தலைமயை தூக்கி எறிந்து விட்டு  புதிய தலைமைக்குள் பயணிக்க வேண்டும். பேரவையின் கொள்கைகளுக்குள் கூட்டமைப்பு இனங்கி  செயற்பட்டால் நாமும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட தயார்.

கூட்டமைப்பு ஆரம்ப காலத்தில் முன்வைத்த கொள்கைகளையே நாம் இப்போது முன்வைக்கின்றோம். எனவே இந்த கொள்கைகளுக்கு இனங்கி செயற்படத் தயார் எனின் இ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் எங்களுடன் வரலாம். தமிழ் மக்கள் பேரவையில் இவர்கள் அங்கம் வகிக்கின்றனர். எனவே கூட்டமைப்பு இவ்வாறு மக்களை ஏமாற்றுவதை தடுக்க இவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும். இதற்கு தேவையானது மாற்று தலைமைத்துவம். இதற்கு வேறு தலைப்புக்கள் தயார் இல்லை எனில் நாங்கள் தனியாக செயற்பட தயார்.