சகல ஆதாரங்களையும், நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக….. (காணொளி)

265 0

அரசாங்கத்திற்கு 6.5 பில்லியன் நஷ்டம் ஏற்படுத்தப்போகும் மோசடிக்கு, நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளமை தொடர்பிலான சகல ஆதாரங்களையும், நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

6.5 பில்லியன் நஷ்டத்தை நாட்டுக்கு ஏற்படுத்தப்போகும் திட்டமொன்றுக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி சார்பில் கடந்தவாரம் டொப் 10 மோசடி எனும் ஆவணமொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதுவிடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் நாம் முறைப்பாடொன்றை வழங்கியுள்ளோம். மேலும், இந்த விடயம் பொய் எனில் என்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறும் நாம் அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்தோம்.

எனக்கெதிராக அவதூறு வழக்கு பதிவுசெய்வதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பலதடவை கூறியபோதும் அதனை அவர் செய்யாமலிருப்பதன் காரணம் குற்றம் நிரூபிக்கப்படும் என்ற அச்சமே.

ஆனால், அவர் விவாதத்தில் பங்குபற்ற முடியாது என்று தெரிவித்துள்ளதோடு, அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக் எனக்கு எதிராக தற்போது வழக்குத் தொடரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக இதற்கு முன்னரும் பலர் எனக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக எச்சரித்துள்ளார்களே ஒழிய, எவரும் இதுவரை வழக்குத் தொடந்ததில்லை. ஏனெனில், நாம் கூறுவது எதுவும் பொய்யல்ல என்பது அவர்களுக்கும் தெரியும். அதேபோல, இந்த விடயத்திலும் எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்வேன். தொலைக்காட்சி விவாதத்தின்போது காண்பிக்க முடியாத இந்த பாரிய மோசடி தொடர்பிலான ஆதாரங்களை நீதிமன்றிலேனும் சமர்ப்பிக்க எனக்கான சந்தர்ப்பமாக அது அமையும். அந்தவகையில், எனக்கு எதிரான அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் வழக்கினை நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.