ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த தனிநபர் பிரேரணை – சன்ன

78 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கோருவது அவசியமானதாகும்.

இவரது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளேன்.

அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டுமாயின் ஜனாதிபதி புதிய மக்களாணையை பெற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாட்டு மக்கள் இவரது கொள்கையை தொடர்ச்சியாக புறக்கணித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.24)  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நேற்று (23) பாராளுமன்ற விவாதத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது. 13 பிளஸ் அல்லது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட புதிய மக்களாணை அவசியமாகும்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் மறுசீரமைப்பிற்காக ஜனாதிபதி அக்கறையுடன் செயற்படுகிறார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்ஷவிற்கு ஆணை வழங்கினார்கள். அரச நிர்வாகத்தில் பலவீனமடைந்தாலும்,ஏனைய நெருக்கடியினாலும் கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக நேரிட்டது. இது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக தற்போது செயற்படுத்தும் தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்படுத்த முயற்சித்தார், தேர்தலில் தோல்வியடைந்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை ஏற்க முடியாது என நாட்டு மக்கள் கடந்த 20 வருட காலத்தில் மூன்று முறை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தினார்கள்.

ஆகவே புதிய மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டுமாயின் அவர் மக்களாணையை கோர வேண்டும்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் வெற்றிடமானால் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார்.