ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை எண்ணி கவலையடைகின்றோம் – தலதா

104 0

ஜனநாயகத்தை மதித்து அரசியலமைப்பை பின்பற்றி எப்போதும் செயற்பட்டுவந்த ரணில் விக்ரமசிங்க தற்போது அதற்கு மாற்றமாக செயற்பட்டு வருகின்றார்.

மறுபக்கத்துக்கு சென்று இவ்வாறு செயற்படுவதையிட்டு கவலையடைகின்றோம். அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டமும் பொலிஸ் கட்டளைச் சட்டமும் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொலிஸ் ஆணைக்குழுவை சுயாதீனப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் பாரிய முயற்சியை மேற்கொண்டு செயற்படுத்தியது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களை ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களுக்கு பொதுஜன பெரமுன அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தவர்களையே அதன் தலைவர் பதவிக்கு நியமித்தார்கள்.

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ 2015, 2019 காலப்பகுதியல் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பொதுஜன பெரமுன தேர்தல் நடவடிக்கையில் தொடர்ந்து செயற்பட்டுவந்தவர்.

அத்துடன் இவர் பசில் ராஜபக்ஷ் வெளிநாட்டில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு சந்திரா பெர்ணான்டோ சென்றிருந்தார்.

அப்படி இருக்கையில் பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தின் நிலை என்ன? ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்குத்தான் பசில் ராஜபக்ஷ் நாட்டுக்கு வந்தாராே தெரியாது.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டமும் பொலிஸ் கட்டளைச்சட்டமும் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு செல்கின்றன. மக்கள் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி சபையில் கடுமையான தீர்மானம் மேற்கொள்வதாக சபையில் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஜனநாயத்தை மதிக்கும் தலைவராகவே நாங்கள் அவரை கண்டோம். ஆனால் தற்போது மறுபக்கத்துக்கு சென்றிப்பதால், அவரின் நிலைப்பாடு மாறி இருப்பதாகவே தெரிகின்றது.

அத்துடன் தற்போது இலங்கை பொலிஸுக்குள் குழுக்கள் ஏற்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் குழு, பிரதிபொலிஸ் மா அதிபரின் குழு என பல குழுக்கள் ஏற்பட்டுள்ளதால், பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். எந்த குழுவின் தலைவருக்கு கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மே 9ஆம் திகதி எவ்வாறு செயற்பட்டார் என்பது எங்களுக்கு தெரியும். அரசாங்கத்தில் உள்ளவர்களின் உதவியுடனே அன்று அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த சென்றிருந்தார்.

சீறுடை அணிந்துகொண்டு சண்டித்தனம் காட்டிக்கொண்டிருக்கும் அதிகாரிகள், ஒரு நாளைக்கு சாதாரண நிலைக்கு வரவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதனால் அரசியல்வாதிகளானாலும் சீறுடை அணிந்து செயற்படும் அதிகாரிகளாக இருந்தாலும் இந்த நிலையை உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.