ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு! அகரப்பாவலன்.

72 0

ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு!
———————————————————–

கார்த்திகைப் பூக்கள்
மாவீரர் தினத்திற்காய் பூக்கின்றது… ஆம்
தேசிய அடையாளம் பெற்ற பூக்கள் அல்லவா!

மாவீரர் நாள் நெருங்க! நெருங்க!
நெஞ்சக் கூட்டுக்குள்
அடைபட்டுக்கிடந்த உணர்வலைகள்
மேலோங்குறது…

தமிழீழ தேசமெங்கும்
ஆங்காங்கே கல்லறைப் பூமிகள்
செப்பனிடப்படுகின்றது…

ஒரு பக்கம் சிங்கள அரசு
தடைவிதித்து திமிர்கிறது
அதையும் மீறி
மாவீரர் தெய்வங்களின்
பணிகளும் தொடர்கின்றது…
மாவீரர் வாரத்தின்
வணக்க நிகழ்வுகளும்
நடைபெறுகின்றது…

நம் மாவீரர்கள்
எதற்காக உயிரீந்து சென்றனர்
என்பதை நெஞ்சில் சுமந்தபடி
மாவீரர் கோவிலின்
மூலவர்களாக காணவிருக்கும்
ஈகைத் தெய்வங்களை நினைத்தபடி
பெற்றமனங்கள் நாட்களை
எண்ணியபடி
காத்துக்கிடக்கின்றன…

எங்கும் நிறைந்த மாவீரர் – ஒன்றாய்
சங்கமாகும்நாளே மாவீரர் நாள்…

ஏங்கிய மனங்களுடன் காத்திருக்கும்
தமிழீழ தேசம்.

-அகரப்பாவலன்-