கல்லறையின் விழிகள் பூத்து நிற்கும்-அகரப்பாவலன்.

195 0

கல்லறையின் விழிகள் பூத்து நிற்கும்
—————————————————————
கார்த்திகை மாதம்
தமிழீழ மண்ணில்
தெய்வீகம் மலரும் காலம் – ஆம்
மனங்களில் வீற்றிருக்கும்
மாவீரத் தெய்வங்களைத் தேடி
கல்லறைக் கோவிலை நோக்கி
ஈர்க்கும் காலம்…

நெருப்பாற்றில் தீக்குளித்து
ஆகுதியாகிய வீரமறவர்களின்
கல்லறைகளில் ஈகைத்தீபமேற்றி
மனமுருகி வணங்கும் காலம்…

மணியோசையின் நாதம்
மனதினை உருக்கும்
கண்களில் சொரியும்
கண்ணீர்த் துளிகள்
கல்லறைகளை நனைக்கும்
தாயவளின் பெற்ற வயிறு
ஏங்கித் தவிக்கும்
தீபங்கள் ஏற்றி வணங்கும் கைககள்
கல்லறையைத் தழுவி
மாவீரரைத் தேடும்…,

உயிரை விதைத்தவரின்
கல்லறைக் கண்கள்
விழித்துப் பூக்கும் …
மாவீரர் அலைகளும்
மாவீரர் பாடலும்
பாச உறவுகளும்
ஓன்றுக்குள் ஒன்றாகி
உணர்வுக்குள் கலந்து
மௌனிக்கும் நேரமது…
தொடரும் விடியலின் பாதை நோக்கி
சக்தி பிறந்து ஆட்கொள்ளும்
கல்லறை விழிகள் பூத்து நிற்கும்.

-அகரப்பாவலன்-