மறவர்களை நினைந்து! -இரா.செம்பியன்-

185 0

மறவர்களை நினைந்து!
………………….. ……………….

வானகம் பூக்கின்ற
நீர்த்துளியேந்தியே
கானகம் பூக்கிறது…!
கார்த்திகையின் சிலிர்ப்பில்
காந்தளின் மடிவிரிந்து
மறவர்களை அர்ச்சிக்க…
நெக்குருகி மனமெங்கும்
மீண்டெழுகிறது நினைவுகள்!

திரண்ட அலைகளோடு
போராடிக் கரைசேரும்
கலங்களைப் போலவே…
தனியரசு நோக்கிய
நெடுவழிப் பாதையில்
மாவீர உணர்வலைகள்
இனமொன்றின்
குருதிச் சுற்றோட்டத்தோடு
கலந்தே மீண்டெழுகிறது
நீங்கா நினைவலைகள்!

கொத்துக் கொத்தாய்ப்
பூக்களைக் கரமேந்த…
கொழுந்துவிட்டெரியும்
குழந்தைப்பருவ குறும்புகளையும்…
தத்தித் தவழ்ந்து
மணலளைந்ந அந்நாள்த்
தடங்களையும் தாங்கி…
தாயவளின் மனத்திரையில்
மீண்டெழுகிறது நினைவலைகள்!

அன்புக்கினிய மக்களின்
அல்லல்ப்படும்
கோலம் நீக்கி…
ஆர்த்தெழுந்து அவர்தம்
புன்னகை ததும்பும்
புதிய உதயத்துக்காய்
உதிர்ந்து போனவர்களே!
தரணிபோற்றும்
மரியாதைக்குரிய வரலாறு
நீங்களேயெனும்
உணர்வுகளைத் தாங்கியபடி ….
வானெழுந்து நீள்கிறது
மீண்டெழும் நினைவலைகள்.

-இரா.செம்பியன்-