அரசாங்கம் கவிழ்ந்த போது நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்குமாறு நான் எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தினேன்.
சவாலை ஏற்று அதில் தோல்வியடைந்தால் அனைவரும் வீடு செல்வோம் என்பதே எனது நிலைப்பாடாகும். எதிர்வரும் இரு வருடங்களின் பின்னரும் வீழ்ச்சியடைந்த நாட்டையே நாம் பொறுப்பேற்கவுள்ளோம். அந்த சவாலை ஏற்பதற்கேனும் தயாராக வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
சனிக்கிழமை (19) கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசாங்கம் கவிழ்ந்ததன் பின்னர் பொதுஜன பெரமுனவில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் , ஆட்சியைப் பொறுப்பேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சவாலை ஏற்று ஆட்சியைப் பொறுப்பேற்றுகுமாறு நானும் எமது தலைவரிடம் தெரிவித்தேன்.
பெரும்பான்மை இன்மையால் தற்போது நாட்டை பொறுப்பேற்று முன்னோக்கிச் செல்ல முடியாது என பொருளாதார நிபுணர்களும் ஆலோசனை வழங்கினர். எவ்வாறிருப்பினும் பொறுப்பினை ஏற்போம். சவாலில் தோல்வியடைந்து அனைவரும் வீடு செல்வோம் என்பதே எனது நிலைப்படாகக் காணப்பட்டது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவை தேவையானளவு கிடைக்காமையின் காரணமாகவே இன்று அவற்றுக்கான வரிசைகளும் குறைவடைந்துள்ளன.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளின் காரணமாகவே போராட்டங்களிலிருந்தும் மக்கள் விலகியுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் , இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்குக் கூட உணவைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.
எதிர்வரும் இரு வருடங்களுக்கு நாட்டின் நிலைமை மாற்றமடையப் போவதில்லை. தற்போதுள்ள நிலைமையிலிருந்து சிறிதளவேனும் முன்னோக்கிச் செல்லப் போவதில்லை. முழு கட்டமைப்பும் ஊழல் மோசடிகளிலேயே நிரம்பியுள்ளது. எனவே எந்த காலத்தில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றாலும் , வீழ்ச்சியடைந்துள்ள நாட்டையே கட்டியெழுப்ப வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியவில்லை என்றால் , பேரூந்தில் முற்பதிவு செய்து , வீடுகளுக்கு செல்ல வேண்டியேற்படும்.
எமக்கு பாரிய சவால் காணப்படுகின்றது என்பதை உணர வேண்டும். கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கோரியதைப் போன்று முறைமையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமெனில் , அரசியல் கலாசாரத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

