வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு

85 0

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் பரிந்துரையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை. 2023ஆம்  ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதேனும் நிவாரனம் கிடைக்கப் பெறுமா என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது.

 

பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்தப்பட்சமேனும் நிவாரனம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

மாறாக வரி அதிகரிப்பை மாத்திரம் வரவு செலவுத் திட்டம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். பொருளாதார ரீதியில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை.

மறுபுறம் இலாபம் பெறும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி அரச வருமானத்தை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

கடன் பெறுவது அரசாங்கத்தின் பிறிதொரு கொள்கையாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பயனற்ற வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம் என்றார்.