2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (14) திங்கட்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் உரையாற்றினார். ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றி நிறைவு செய்தததை தொடர்ந்து ஆளும் தரப்பினர் மாத்திரம் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.


பலத்த பாதுகாப்பு
சபாநாயகர் தலைமையில் இன்று (14) பாராளுமன்றம் கூடிய போது பாராளுமன்றத்தினதும், பாராளுமன்ற சுற்று வட்டத்தினதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டன. ஆயுதமேந்திய இராணுவத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்
இன்று பிற்பகல் 01.30 மணியளவில் படைகள சேவிதல் செங்கோலை ஏந்திய வண்ணம் சபையின் பிரதான வாயிலாக சபைக்கு வருகை தந்தார். படைகள சேவிதருடன் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம்,பிரதி செயலாளர் நாயகம் ஆகியோர் வருகை தந்தனர்.
முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி




பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக கூடியது. வழக்கமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது பொது மக்கள் கலரி மூடப்பட்டு அரச அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை முதல் தடவையாக குறிப்பிட்ட சில பாடசாலைகளை சேர்ந்த 450 பாடசாலை மாணவ தலைவர்கள் நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோன்று வழக்கத்திற்கு மாறாக சபாநாயகர் கலரியிலும் வெளிநாடுகளின் தூதுவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என 40 இற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர்.
தாள்களை கையிலேந்தி சபைக்கு வந்த நிதியமைச்சர்
வழக்கமாக வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவதற்காக நிதியமைச்சர் சபைக்குள் வருகை தரும் போது கையில் வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய பெட்டியை அல்லது கோப்பினை கொண்டு வருவார். ஆனால் தற்போதைய நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய தாள்களையே கையில் கொண்டு வந்தார்.
01 மணித்தியாலமும்,15 நிமிட உரை
பாராளுமன்றம் பிற்பகல் 01.30ற்கு கூடிய நிலையில் சபாநாயகர் தின பணிகளை முடித்து நிதியமைச்சரை வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுமாறு அறிவித்ததை தொடர்ந்து அரச தரப்பினரின் வரவேற்புடன் அமைச்சர்கள் புடைசூழ சபைக்குள் வந்த நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான தனது வரவு செலவுத் திட்ட உரையை பிற்பகல் 01.35 மணிக்கு ஆரம்பித்து 1 மணிநேரமும்,15 நிமிடங்களும் உரையாற்றி 2.50 இற்கு நிறைவு செய்தார்.
ஒரு தடவை கூட கைதட்டு பெறாத உரை

வழக்கமாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் நிதியமைச்சர்கள் மக்கள் சார்ந்த நிவாரன அறிவிப்புக்கள் மேலும் சில அறிவிப்புக்களை வெளியிடும் போது அரச தரப்பினர் சில வேளைகளில் எதிர்க்கட்சியினர் கூட அந்த அறிவிப்புக்களை மேசைகளில் தட்டி வரவேற்பது வழக்கம். ஆனால் இன்று நிதியமைச்சரின் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நீண்ட உரையின் போது அவரின் ஒரு அறிவிப்பிற்கு கூட அரச தரப்பினரோ, எதிர்க்கட்சியினரோ கைதட்டவில்லை. மாறாக இரு தரப்பினரும் இருகிய முகங்களுடன் உரையை செவிமெடுத்துக் கொண்டிருந்தனர்.
சபைக்கு வராத தலைவர்களும், தாமதமாக வந்த தலைவர்களும்
வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன், இ.பி.டி.பியின் தலைவரும், அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா ஆகியோர் சபைக்கு வருகை தராத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகி 40 நிமிடங்களுக்கு பின்னரும், அதே போன்று சில அமைச்சர்களும் சபைக்கு தாமதமாகவே வருகை தந்தனர்.
வெற்றிடமான நிலையில் பல ஆசனங்கள்
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது எதிர்க்கட்சி தரப்பினரின் ஆசனங்கள் மட்டுமன்றி, ஆளும் தரப்பிலும் பல ஆசனங்கள் வெறிச்சோடி கிடந்தன. நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட உரையின் போது இடை நடுவில் எழுந்து சென்ற போதும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ போன்றவர்கள் இறுதி வரை அமர்ந்திருந்து உரையை செவிமெடுத்தனர்.
தேநீர் உபசாரம் இரத்து

வரவு செலவுத் திட்ட உரையை நிறைவு செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களை தேநீர் உபசாரத்தில் பங்கேற்றுமாறு நிதியமைச்சர் அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தேநீர் உபசாரம் இரத்து செய்யப்பட்டதால், நிதியமைச்சரால் அழைப்பு விடுக்கப்படவில்லை.

