மட்டக்களப்பில் 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் !

75 0

ட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சனிக்கிழமை (நவ 12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் தாய், தந்தை வேலை நிமித்தமாக பண்ணையொன்றில் தங்கிவந்த  நிலையில், அவர்களது நகர்ப்பகுதி வீட்டில் சிறுமி அவரது பாட்டியுடன் (அம்மாவின் அம்மா) தங்கியிருந்து கல்விகற்று வருகிறார்.

இந்நிலையில் சிறுமி கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டிலிருந்து தனியாக சென்றுள்ளார்.

அப்போது இளைஞரொருவர் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டுச் சென்றதையடுத்து, அந்த இளைஞருடன் சிறுமி தொடர்புகொண்டுள்ளார்.

பிறகு அந்த இளைஞர் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு சிறுமியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து, சிறுமியை வெளியே செல்ல அழைத்துள்ளார்.

அவ்வாறே இளைஞர் அழைத்ததும் உடன்வந்த சிறுமியை, தனது கூளாவடி வீட்டுக்கு கூட்டிச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சிறுமியின் தந்தை கடந்த 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமி வீட்டில் இல்லை என்பதை அறிந்துகொண்ட தந்தை, வீட்டுக்குள் மறைவாக இருந்து, மோட்டார் சைக்கிளில் இளைஞருடன் மகள் வந்திறங்குவதை அவதானித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த தந்தை இளைஞரை மடக்கிப் பிடித்து தாக்கியதையடுத்து, இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த இளைஞன் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னர் குறித்த சிறுமியை ஆணொருவர் காரில் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதன் தொடர்பாக குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.