உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் , சட்டமா அதிபர் திணைக்களமானது அரச அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கு அவமானமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாரும் , அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்தையும் , சட்டமா அதிபர் திணைக்களத்தையும் மீண்டும் வலியுறுத்துவதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , அருட்தந்தை சிறில் காமினியினால் பேராயரில் விசேட அறிவித்தல் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
‘நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகளால் , மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகளை புதிதாக விளக்கத் தேவையில்லை.
இவ்வாறு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுகின்ற சமூக செயற்பாட்டாளர்கள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளும் அதிகரித்துச் செல்கின்றன.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் , அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் என்பன அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன.
இதன் போது பயங்கரவாதத் தடைச் சட்டமும் நியாயமற்ற முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறி தம்ம தேரர் ஆகியோர் 75 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களது உடல் நலனும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது இவ்வாறிருக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுகின்றமை மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும்.
சட்டமா அதிபர் திணைக்களமானது , உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கத்தின் தேவைக்கு தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையை கண்டிக்கின்றோம்.
இந்த நிலைமையில் உண்மையில் துரதிஷ்டவசமானதாகும். இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் நீதிக்கும் , அதன் சுயாதீனத் தன்மைக்கும் அவமானமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களம் ஒதுங்கியுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதவொரு விடயமாகும்.
அதே போன்று முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கப்படவிருந்த சாட்சிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பொது மக்களிடம் மறைக்கப்படுவதானது , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளையும் மறைக்கும் செயற்பாடாகும்.
இவ்வாறு மறைக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளை உடனடியாக மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறும் , இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்திடமும் , சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
நாட்டினுள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

