ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோருக்கு மீண்டும் உயர் பதவிகள்

163 0

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு கட்சின் தீர்மானத்துக்கு மாற்றமாக வாக்களித்தமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு எழுத்து மூலம் மன்னிப்பு கோரியதற்கு அமைய அவர்கள் மன்னிக்கப்பட்டு, மீண்டும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டதுடன் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எம்.ஹரீஸ் மன்னிப்பு கோரத நிலையில் அவர் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாடு நேற்று கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் புத்தளத்தில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த கட்சியின் உயர் பீடம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் 20ஆவது திருத்தத்துக்கு தாங்கள் ஆதரத்தது, கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமானது. அதனால் தங்களது தவறுக்கு எந்த தண்டனையை வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்து, மன்னிப்பு கோரி கட்சியின் உயர் பீடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்கள் கட்சியின் ஏற்கனவே இருந்த பதவிகளை மீண்டும் வழங்குவதற்கும் உயர் பீடம் அனுமதி வழங்கியிருந்தது. அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த எம்.எஸ்.தெளபீக் மீண்டும் அந்த பதவிக்கு நேற்று நியமிக்கப்பட்டார். என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் இறுதிவரை மன்னிப்பு கோரி கடிதம் கையளிக்காத காரணத்தினால் அவர் கட்சியின் சகல பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்படும் என கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உரையின் போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் அவர் வகித்த பிரதி தலைவர் பதவி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூருக்கு வழங்கப்பட்டது. அதேநேரம் எச்.எம்.ஹரீஸ் தான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரினால் அவரது கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு தயார் எனவும் கட்சியின் உணர் பீடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச்சென்ற பலரும் மீண்டும் நேற்று கட்சியில் இணைந்துகொண்டனர். குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டிருந்தார். அவர் அங்கிருந்து விலகி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ\லிம் காங்கிரஸில் இணைந்துகொணடார். அவருக்கு நேற்று பிரதித் தலைவர் பதவி வழங்கட்டது. கல்முனை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், வடமேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஜவஹர்ஷா ஆகியோரும் மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டனர்.

அத்துடன் நேற்றைய பேராளர் மாநாட்டின்போது கட்சியின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டதுடன் தவிசாளராக ஏ,எல்.எம். மஜீத் நியமிக்கப்பட்டார். சிரேஷ்ட பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் நியமிக்கப்பட்டதுடன் பிரதித் தலைவர்களாக எம்.ஐ.எம். மன்சூர், யூ.ரி.எம். அன்வர்.அலிஸாஹிர் மெளலானா மற்றும்சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.