இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மாத்திரைகள் கைப்பற்றல்

331 0

கடல் மார்க்கமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1 லட்சத்து 88 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாம்பன் அருகிலுள்ள முந்தல்முனை கடற்பகுதியில் படகு ஒன்றிலிருந்து குறித்த மாத்திரைகள் நேற்று ராமேஸ்வரம் சுங்க தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆறு பயணப் பைகளில் ஒன்பது பொதிகளில் இருந்த அந்த மாத்திரைகளில், வலி நிவாரணி மற்றும் கருத்தடை மாத்திரைகள் என்பனவே அதிகமாக காணப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் படகின் மூலம் கடத்தப்பட தயாராக இருந்த நிலையில், கடத்தல்காரர்கள் படகை கைவிட்டு தலைமறைவாகியுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையில், சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 1.23 லட்சம் ரூபா பெறுமதியான மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.