கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது- பத்தேகம சமித்த தேரர் (காணொளி)

355 0

 

கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது என்று தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் தலைமையில் தியதந்ததேரர், தம்பராயத்த தேரர் ஆகியோர் அடங்கிய குழவினர்  கேப்பாபிலவிற்கு நேரடியாக விஜயம் செய்து கேப்பாபிலவு மக்களின் போராட்டம் தொடர்பான யதார்த்த நிலைமைகளை பார்வையிட்டதோடு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

சொந்த மண்ணில் மீளவும் குடியேறுவதற்காக கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது எனவும், கேப்பாபிலவு மக்களின் கோரிக்கைகளை தென்னிலங்கைக்கு தெளிவுபடுத்துவேன் எனவும் பத்தேகம சமிந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் பிரதிநிதிகளிடத்தில், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையிலான குழவினர் உறுதியளித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் மற்றும் சிவன் அறக்கட்டளையின் தலைவரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான கணேஷ் வேலாயுதம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமக்குச் சொந்தமான காணிகள் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக 19ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவம், விமானப்படையினர், புலனாய்வாளர்கள் ஆகியோரின் பிரசன்னத்துக்கு மத்தியில் தமது நிலைப்பாட்டை மாற்றாது தொடர்ந்தும் சொந்தை மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் கவனயீர்ப்பு பேரணிகளையும், குரல்களையும் கொடுத்து வருகின்றனர்.