இனவாத கருத்துக்களை வெளியிடும் ஜீ.எல்.பீரிஸ்!

332 0

முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருவதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் அந்த ஊடகக் குறிப்பில்….

இராமநாதன் கண்ணன் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு அமையவே என ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றது.

இந்தக் கருத்தானது ஓர் இனவாத அடிப்படையிலான கருத்தாகும்.தமிழர் பிரதேசங்களில் மட்டுமன்றில் தாமதமாகும் வழக்குகளை துரித கதியில் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்க வேண்டும்.

முன்னாள் நீதி அமைச்சரான ஜீ.எல்.பீரிஸ் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பது குறித்த நடைமுறைகளையும் சட்டங்களையும் அறியாதவரல்ல.

அரசியல் கட்சியொன்றுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க முடியாது.இவ்வாறான ஓர் நிலையில் பொய்யாக இந்தக் குற்றச்சாட்டை ஜீ.எல்.பீரிஸ் சுமத்தியுள்ளார்.இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதானது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனியவினால், நீதிச்சேவை சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாக கண்ணன் நியமிக்கப்பட்டமை பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன என ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.