அமளியுடன் கூடியது தமிழக சட்டசபை: நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி

316 0

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சட்டசபை இன்று கூடியதும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ள நிலையில், அவரது அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். முதல்-அமைச்சர் பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்றால், சட்டசபையில் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டசபை இன்று சட்டமன்றம் கூட்டப்பட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கடிதம்அளித்தபோது, அவருக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. அவர்களில் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே எடப்பாடி அணிக்கு 122 உறுப்பினர் ஆதரவு இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்டமன்றம் காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கொறடாவுக்கு பேச மைக் வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல் மேலும் பல எம்.எல்.ஏ.க்களும் பேச அனுமதி கேட்டனர். அதிமுகவின் இரு அணிகளின் உறுப்பினர்களும் முழக்கம் எழுப்பினர். இதன் காரணமாக கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.