அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக பணிபுரியும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த யு.எஸ்.ரணவீர என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தாம் வரி செலுத்துபவர் எனவும், அரசாங்கம் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலத்தின் மூலம் ஒருவரின் மாதாந்த வரிக்கு உட்பட்ட வருமான வரம்பு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது செலுத்த முடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டு, பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்றுமதி, உள்ளுர் கைத்தொழில், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற துறைகள் ஊக்கம் இழக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள், அரசியலமைப்பின் கீழ் மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை கடுமையாக மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் 15, 16, 22, 29, 36 மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திடம் மனுதாரர் மேலும் கோரியுள்ளார்.

