பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் அவற்றினை வெற்றிக்கொள்வதற்கும் அன்று தொடக்கம் இன்று வரை ஆட்சியாளர்கள் நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்வதே தீர்வாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் வளங்களை விற்பனை செய்தும் நாடு இன்று வங்குரோத்து நிலையையே அடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்வதன் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் அவ்வாறானதொரு சிஸ்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்
திங்கட்கிழமை (24 ) நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
டொலர் நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு அன்று தொடக்கம் இன்று வரை ஆட்சியாளர்கள் நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்வதே தீர்வாக கொண்டுள்ளனர்.
உதாரணமாக் களனி டயர், வானி சங்ஸ்தா, கந்தளை சீனித்தொழிற்சாலை, பலங்கொடை பீங்கான் உற்பத்தி நிறுவனம் போன்றவை முன்னைய அரசாங்களால் விற்பனை செய்யப்பட்டன
அன்று பணம் இல்லை என்ற போது ரணில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தார் இன்று அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளை மறுசீரமைப்பு எனும் பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
குறிப்பாக நீண்டகாலமாக இதனை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக இதனை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எந்தவொரு நாட்டிலும் வளங்களை விற்பனை செய்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. ஆட்சியாளர்களால் முடியாத போது வளங்களை விற்பனை செய்கிறார்கள் என்பதே நிதர்சனமாகும்.
ரணில் பிரதமர் பதவியை பொறுப்பேற்க முன்னர் அனுரவிற்கு பதவி ஏற்குமாறு அழைப்பு வந்தும் அதனை அவர் பொறுப்பேற்கவில்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இந்தச்செய்தி பொய்யாகும்
அனுரவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டு இருந்தால் பெசில் போன்ற தரப்பினர் சிறையில் இருந்து இருப்பார்கள். இதனை கருதியே அன்று அனுரவிற்கு பதவியை வழங்கவில்லை இவ்வாறு பதவிகளை பொறுப்பேற்குமாறு யாரும் கூறவில்லை.
ரணில் இன்று ராஜபக்ஷவின் பாதுகாவலராக செயற்படுகிறார். கோட்டாபயவிற்கு வீடொன்று வழங்கி 34 இராணுவ வீரர்கள், 30 கடற்படை வீரர்கள், 6 விமானப்படை வீரர்கள் உள்ளடங்களாக 70 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
ரஞ்சன் ராமநாயக்க கூறுவார் அதாவது இவர்கள் அனைவரும் நண்பர்கள். எவரையும் எவரும் பிடிக்க மாட்டார்கள். மஹிந்த ரணிலை பிடிக்க மாட்டார். ரணில் மஹிந்தவைப் பிடிக்க மாட்டார் இந்நிலையே இன்றும் காணப்படுகிறது என்றார்.

