சூதாட்ட வரியை 150 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

181 0

சூதாட்டத்திற்கான வருடாந்த வரியை 20 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சூதாட்ட வரி 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி அறவீட்டு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கும் அதே வேளை, மறுபுறம் இவற்றை கைவிடக் கூடிய நிலைமையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையில் வருடத்திற்கு 20 கோடி ரூபாவாகக் காணப்பட்ட சூதாட்டத்திற்கான வரியை 50 கோடியாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த வரி 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதோடு மாத்திரமின்றி , இவற்றை கைவிடக்கூடிய நிலைமை ஏற்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

அதே போன்று இந்த துறைசார் ஏனையவற்றுக்கான வரிகளிலும் திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய இவற்றுக்கான பதிவிற்கு பிரத்தியேக வரியை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தத்தின் மூலம் இலங்கையர் ஒருவர் சூதாட்ட களத்திற்குள் நுழைய வேண்டுமெனில் அவரிடமிருந்து 200 டொலர் அறவிடப்படும்.

நேரடி பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கான வருடாந்த வரியை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது 10 சதவீதத்திலிருந்து 15 சதவீத வரி அதிகரிப்பாகும். பந்தயத்திற்கான பிரதிநிதிகளுக்கான வருடாந்த வரியை 5 மில்லியன் ரூபா அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர நேரடியானவை தவிர்ந்த ஏனைய பந்தயங்களுக்கான வருடாந்த வரியை 75 000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அறவீடுகளுக்கு மேலதிகமாக சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுக்களின் மூலம் கிடைக்கப் பெறும் இலாபத்திலும் 40 சதவீத வரி அறவிடப்படும்.

மேலும் மதுபான போத்தலொன்றுக்கு தற்போது 75 சதவீத வரி அறவிடப்படுவதோடு , சிகரட்டுக்கு 85 சதவீத வரி அறவிடப்படுகிறது. இவற்றிடமும் 40 சதவீத வருமான வரி அறவிடப்படுகிறது. இதனையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.