கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெலிகமவில் ஒருவர் கொலை

213 0

வெலிகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (ஒக் 19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டி வீதி பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடையவர் எனவும் ஹெட்டி வீதி, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், தனது நண்பர்களுடன் ஹெட்டி வீதி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது அவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்த சிலர், அவர்களை சமரசம் செய்து, அவ்விடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இருப்பினும், குறித்த நபர் அதன் பின்னரும் நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அவ்வேளை முன்னதாக அவருடன் தகராறில் ஈடுபட்டவர், மேலும் சிலரை அழைத்துக்கொண்டு குறித்த நபரின் வீட்டுக்கு சென்று, அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.