உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கப்பாட்டை பெறவேண்டும்

96 0

ண்மையை கண்டறியும் பொறிமுறை ஒன்றையோ அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றையோ ஸ்தாபிக்க வேண்டுமெனில், அதற்கு முன்னதாக அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டை பெறவேண்டிய தேவை இருக்கின்றது.

எனவே, அதனை செய்யாமல், வெறுமனே ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அவசரம் காண்பிப்பதில் பயனில்லை என்று வீரகேசரியிடம் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளை செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ரீதியில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து மேற்படி ஆணைக்குழுவில் முன்னிலையான இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் விளக்கமளித்தமையை அடுத்து இவ்விடயம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் என்னவென்று வினவியபோது, இறுதி அறிக்கையும் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதுபற்றி கூறுவதாக அமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார்.

அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதால் அதுகுறித்து ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் அதற்கு முன்னதாக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டை பெறவேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று நிதி ரீதியான தேவைப்பாட்டை பூர்த்தி செய்யவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் தற்போது ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாகவும், இவ்வாறானதொரு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றவேண்டுமா? அல்லது ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்களின் கீழ் ஸ்தாபிக்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.