அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற அரசாங்கம் கூட்டுப்பொறுப்புடன் செயற்படும். தனிப்பட்டவர்களின் எதிர்ப்புக்கள் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு பாதகமாக அமையாது.
எனவே மக்கள் எதிர்பார்த்தவாறு அரசியலமைப்பு திருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும், எதிர்தரப்பினர் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் அறிவித்திருக்கின்றார்.
எனவே மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய இத்திருத்தம் நிறைவேற்றப்படும். இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. காரணம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
அது பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
அதற்கமைய அவரவர் நிலைப்பாடுகளுக்கமைய அவர்களுக்கு வாக்குகளைப் பயன்படுத்த முடியும். இதுவே ஜனநாயக முறைமையாகும்.
கொள்கை ரீதியில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
அதே போன்று ஒரே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கிடையிலும் முரண்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் இலட்சனையாகும். எனினும் கட்சி என்ற ரீதியில் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை.
அமைச்சரவை அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே அதற்கு ஆதரவாக எமது வாக்கினை பாராளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம் அது ஏற்கனவே எம்மால் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் என்றார்.

