22 ஆவது திருத்தம் நிறைவேறாவிடின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது

67 0

ஜனநாயக போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரின் அடக்குமுறைகள் சர்வதேச அரங்கில் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.

நாட்டில் சட்டவாட்சி கோட்பாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேறாவிடின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழ (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஜனநாயக ரீதியிலான பல சிறந்த இலட்சிணங்களை கொண்டு இயற்றப்பட்டது. 19 ஆவது திருத்தத்தை சர்வதேசம் அங்கிகரித்தது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தவுடன் முறையான வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியது.

பாராளுமன்றத்தின் அதிகாரம் வரையறுக்கப்பட்டதால் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல், தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது.

இரசாயன உர பாவனை மற்றும் இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. விவசாயத்துறைக்கு ஏற்படுத்திய தாக்கம் இன்று பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியது.

விவசாயத்துறையில் சேதன பசளை திட்டத்தை ஒரே தடவையில் அறிமுகப்படுத்தியமை தவறானது என்பதை ஆளும் தரப்பினரே தற்போது ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்து, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தல், ஆணைக்குழுக்களுக்கான தலைவர் நியமனம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு ஒருசிலர் தற்போது குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றாவிடின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சட்டவாட்சி கோட்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள நிலையில் பொலிஸார் அதற்கு எதிர்மாறாக செயற்படுகிறார்கள்.

ஜனநாயக போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரின் செயற்பாடுகள் சர்வதேச அரங்கில் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றார்.