உள்ளூராட்சி தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது

89 0

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் முறைமை திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என சுதந்திரமானதும்,நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு (பெப்ரல்)அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராட்சி தெரிவித்தார்.

நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகள் அரசியல் கட்சி தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவது கவலைக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாத சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள பெப்ரல் அமைப்பின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் முறைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்த போதும்,கடந்த 09 ஆம் திகதி குறிப்பிட்ட கருத்து அவதானத்துக்குரியது.

நாட்டு மக்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை சாதகமாக கொண்டு முழு தேரதல் முறைமையினையும் பலவீப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய அடிப்படை விடயங்களை கருத்திற் கொண்டு இதுவரை காலமும் தேர்தல் முறைமை திருத்;தம் செய்யப்படவில்லை,மாறாக அரச தலைவர்களும்,அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும் போது தேர்தல் முறைமையை திருத்தம் செய்து அடிப்படை வாக்குரிமையை பறித்துக் கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக எதிர்த்து ஏதாவதொரு தேர்தலை நடத்துமாறு அழுத்தமாக வலியுறுத்தி வரும் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் முறைமையை திருத்தம் செய்வதாக குறிப்பிட்டுக்கொண்டு,உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட முயற்சி;க்கிறார்.

தேர்தல் முறைமை திருத்தத்தை ஒரு ஆயுதமாக கொண்டு உரிய காலத்தில் இடம்பெற வேண்டிய தேர்தல் பிற்போடப்படுகிறது.

2012ஆம் ஆண்டு 12ஆம் இலக்க உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டத்திற்குரிய எல்லை நிர்ணயம் முழுமைப்படுத்தாத காரணத்தினால் 2012ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததன் பின்னரே இரண்டு வருடங்கள் தாமதமான நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம்; மாகாண சபை முறைமையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக விடயங்கள் உள்ளடக்கப்பட்டதுடன்,தேர்தல் முறைமை முழுமையாக திருத்தம் செய்யப்பட்டது.

மாகாண சபை தேர்தல் முறைமையில் சட்ட சிக்கல் காணப்படுவதால் 09 மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்படுகிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஜனநாயன இலட்சினங்களை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிரதமராக பதவி வகிக்கும் போது குறிப்பிட்டார்.

இருப்பினும் 22 ஆவது திருத்தம் குறித்து இதுவரை முன்னேற்றகரமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்,புதிதாக தெரிவு குழு அமைத்து தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் திருத்த முறைமை தொடர்பான குழு விரிவான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.இந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் ஆண்டு நிச்சயம் உள்ளுராட்சிமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும். தேர்தல் முறைமை தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு, உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஆகியவற்றை ஒன்றாகவே நடத்தலாம்.

பொருளாதார மீட்சிக்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏதாவதொரு தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

தேர்தல் முறைமை என குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கெதிராக நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்றார்.