தேசிய மக்கள் சபைக்கான பிராந்திய அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

78 0

அரசியல் சார்பற்ற வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மக்களை சபையை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதற்கமைய இதற்கான பிராந்திய அலுவலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்துகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கமைய முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட குழுவினரால் மக்கள் சபை தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பல்வேறு வகைகளிலும் பிளவடைந்துள்ள சமூகத்தை ஒன்றிணைப்பதற்காக சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்த மக்கள் சபையை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டது.

அரசியல் சார்பற்ற அதே வேளை, குறித்த கிராமம் தொடர்பில் பொறுப்புணர்வு கொண்டவர்களைக் கொண்டு இந்த மக்கள் சபையை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக மக்கள் சபை முறைமையை ஸ்தாபிப்பதற்காக தேசிய மக்கள் சபை அலுவலகத்தை அமைப்பதற்கு குறித்த அமைச்சரவை பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கும் , கொள்ளைகளை தயாரித்தல் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளுக்கு நேரடியாக மக்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சபை முறைமை கோரிக்கையை அரசாங்கம் அடிப்படை கொள்கையாக ஏற்றுக் கொள்கிறது.

அத்தோடு இதற்காக தேசிய மட்டத்தில் சுயாதீன பிராந்திய நிறுவனமாக தேசிய மக்கள் சபை அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுத்தமாக பெயர் பட்டியலை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக அவற்றை ஜனாதிபதியின் செயலாளரிம் கையளிக்குமாறும் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எவ்வித பாகுபாடும் இன்றி சுயாதீன மக்கள் சபையின் மூலம் அந்தந்த பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.