காணாமல் போனோருக்கான இழப்பீட்டு தொகை 2 இலட்சமாக அதிகரிப்பு

58 0

காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200 000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் , நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையை நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000 ரூபா தொகையை செலுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

எனினும் காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை, செலுத்தப்படுகின்ற 100,000 ரூபா தொகை போதுமானதாக இன்மை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு செலுத்தப்படுகின்ற தொகையை 200,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.