பயணங்களைத் தொடருவோம்!

409 0

அக்டோபர் 10 முதல் பெண் மாவீரரான  2 ஆம் லெப். மாலதியின் நினைவு நாளும் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளும் ஆகும்.

தமிழீழப் பெண்கள் வீரத்தினாலும் தியாகத்தினாலும் விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு முன் உயர்ந்து நிற்கின்றனர்.

தமிழீழப் பெண்களின் தலைநிமிர்வுக்கு வழிகாட்டினார் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

“ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும் முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” என தமிழீழத் தேசியத்தலைவர்அவர்கள் பெண்களை தமது விடுதலை இயக்கத்தில் இணைத்து பெண்களுக்கு ஆயதப் பயிற்சி அளித்து அகிலம் போற்ற பெண்கள் படையணிகளை உருவாக்கினார்.

தேச விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் பெண்கள் தம்மை இணைத்துக் கொண்டனர்.

எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

10.10.1987 அன்று நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும் அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின.

விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரராக 2 ஆம் லெப் மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார்.

திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது ‘“என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர். காயமடைந்த பின் இராணுவத்தின் கரங்களில் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டாள்.

இரண்டாம் லெப். மாலதி ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் மாவீரரானார். முதல் பெண் மாவீரரின் நினைவு நாளை தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

2ம் லெப். மாலதி நினைவாக 2ம் லெப். மாலதி படையணி உருவாக்கப்பட்டது.

மாலதி,
தாய் நிலம் விடியும்
எனும் கனவோடு
மண்ணிலே நீ விழுந்தாய்.
உன் பெயர் சொல்லி
எம் படையணி தன்னை
அண்ணன் வளர்த்தெடுத்தான்.

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம்.