ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
எனினும், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகளில் பாதகமான தாக்கத்தை செலுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜெனீவாவில் மீண்டுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை இலங்கைக்கு பாரிய தோல்வியாகும்.
வெவ்வேறு சட்டங்களை பயன்படுத்தி பிரஜைகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களே இதற்கு காரணமாகும்.
மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றமை, ஜனநாயக போராட்டங்கள் அடக்குமுறைகள் ஊடாக ஒடுக்கப்படுகின்றமை சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் மனித உரிமைகளை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
ஆனால், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, இவற்றிடமிருந்து கிடைக்கப்பெறவுள்ள உதவிகளில் பாதகமான தாக்கத்தை செலுத்தும்.
எனவே, அரசாங்கம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடன் மறுசீரமைப்பு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.
அத்தோடு ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
ஜனாதிபதிக்கு சர்வதேசத்தில் வரவேற்பு காணப்பட்டால், அவர் ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடன் தொடர்புகொண்டு அதன் மூலம் எரிபொருள் இறக்குமதியை முன்னெடுக்கலாம்.
அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மோசடிகளுக்கு வாய்ப்பு காணப்படாது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், அதற்கு எமது முழு ஒத்துழைப்பினை வழங்குவோம்.
எவ்வாறிருப்பினும், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை.
மீண்டுமொரு முறை தன்னால் ஜனாதிபதியாக முடியாது என்பதனால் நிறைவேற்றதிகாரங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் என்றார்.

