குருந்தூர் மலை பிரச்சினை உட்பட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடி வருகின்றோம்

227 0

குருந்தூர் மலை பிரச்சினை உட்பட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி வருகின்றோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை பிரச்சினையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை.  தனிப்பட்ட விதத்திலும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம் எந்த விதத்திலும் எவரும் இனவாதமாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர் நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டால் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டே அன்று அவர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதை தவிர்த்தார். இப்போது எந்த விதத்திலும் ஒரு போதும் அவ்வாறான பொறுப்பை இந்த அரசாங்கத்தில் தான் எடுக்கப் போவதில்லை என தெரிவித்து வருகின்றார். இதன் மூலம் அவரது இரட்டை வேடம் புலப்படுகிறது.

இப்போது நிபந்தனைகளை முன் வைக்கும் அவர்  பொறுப்புக்களை பாரமெடுத்து அதன் பின்னர் அத்தகைய நிபந்தனைகளை முன் வைத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. எனவே பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வராத நிலையி் ஜனாதிபதி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதற்காக தற்போது பிரச்சினை இல்லை என தெரிவிக்கவில்லை.

அதனால் நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துக்கொள்வதை விட்டு, நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றார்.