அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருடன் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ஹஷான் ஜீவந்த குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (7) அவர் தங்காலை தடுப்பு முகாமிலிருந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தங்காலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தடுப்புக் காவலில் முன்னெடுத்த விசாரணைகளில் ஹஷான் ஜீவந்த குணதிலகவுக்கு எதிராக எந்த சாட்சியங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்த நிலையில் அவரது தடுப்புக் காவலை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தனர்.
இதனையடுத்தே அவரை முற்றாக விடுதலை செய்து நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி கடந்த 50 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த ஹஷான் ஜீவந்த குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி அளித்த நிலையிலேயே, அவர்கள் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டர்.
அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரோடு ஒன்றாக பயணித்த ஹஷான் ஜீவந்த குணத்திலக்கவும் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதாங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டு களனி வலய குற்ற விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த 21 ஆம் திகதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், இந்த மூன்று பேரும் அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அவதானம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையிலேயே, சி.ரி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி. இணைந்த பொலிஸ் குழுவொன்றூடாக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

