ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்க மாட்டோம்

98 0

பிரிட்டன், கனடா ஆகிய இருநாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையைக் கொண்டுவருவதில் முனைப்பாக செயற்பட்டிருப்பதுடன் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்திய நாடுகள் தமது பொருளாதார வலு மற்றும் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஏனைய பலமற்ற நாடுகள் மீது அழுத்தம் பிரயோகித்துவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை கடந்த முறையைவிட இம்முறை இலங்கைக்கு சார்பாகக் குறைந்தளவிலான வாக்குகளே கிடைக்கப்பெறும் என்றாலும் நாட்டின் அரசியலமைப்பிற்கும் சுயாதீனத்தன்மைக்கும் எதிரான இப்புதிய பிரேரணையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல், எவ்வித இன, மதபேதங்களுமின்றி நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தல், அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்கல் ஆகிய 3 விடயங்களுக்கு தாம் முன்னுரிமையளித்துவருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது.

அதன் அடுத்தகட்டமாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் கொண்டுவந்திருக்கும் புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜெனிவா சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அங்கிருந்து நிகழ்நிலை முறைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்றுக்கொண்டு ஜெனிவாவில் நடைபெறும் விடயங்கள், அவைதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது குறித்துத் தெளிவுபடுத்தினார். அச்சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:

கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பேசப்பட்டுவருகின்றது.

முன்னாள் போராளிகள் 12,194 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டமை, படையினர் வசமிருந்த காணிகளில் 94 சதவீதமானவை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்பட்டமை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டமை என்பன உள்ளடங்கலாக பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் அவைகுறித்து பேரவை திருப்தியடைந்திருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய இருநாடுகளும் அங்குள்ள பிரிவினைவாத புலம்பெயர் சமூகத்தினரின் அழுத்தங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுவருகின்றன.

அந்தவகையில் பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட இணையனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து தற்போது எமக்கெதிராக முன்வைத்திருக்கும் யோசனையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதாரங்களை சேகரித்தல் என்ற விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் 8 ஆவது பந்தியை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

ஏனெனில் அதன்மூலம் அவர்கள் வழமையாகக் கூறிவருவதைப்போன்று இலங்கையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற எடுகோளின் அடிப்படையில் எமது இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் பிரகாரம் வழக்குத்தொடர்வதற்கு இடமளிக்கப்படுகின்றது. இதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏற்றுக்கொண்டாலும்கூட அதற்கு எமது அரசியலமைப்பு இடமளிக்காது.

எதுஎவ்வாறிருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் வாக்குரிமைகொண்ட 47 உறுப்புநாடுகளில் பலம்வாய்ந்த நாடுகள் தமது பொருளாதார ரீதியான வலு மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஏனைய வலுக்குறைந்த நாடுகள்மீது அழுத்தம் பிரயோகிக்கின்றன.

இத்தகைய பலம்பொருந்திய நாடுகளை எதிர்த்துநிற்பது கடினமான விடயமெனும் போதிலும், அவர்களின் தீர்மானத்தை எம்மால் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இருப்பினும் கடந்த வாக்கெடுப்பின்போது கிடைக்கப்பெற்ற வாக்குகளைவிட இம்முறை எமக்குக் குறைந்தளவிலான வாக்குகளே கிடைக்கும்  என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதனை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்நாட்டிலேயே உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். இருப்பினும் அப்பொறிமுறையின் காலவரையறையை முன்கூட்டியே கூறவியலாது.

எனவே தென்னாபிரிக்கா, ஆர்ஜென்டீனா, பொலிவியா, சிலி போன்ற நாடுகளில் இந்தப் பொறிமுறை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல், எவ்வித இன,மதபேதங்களுமின்றி நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தல், அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்கல் ஆகிய 3 விடயங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.