அரசாங்கத்தின் தீக்கோழி மனோபாவம்

138 0

அரச அலுவலர்கள் செய்தியாளர்களுடன் உத்தியோகபூர்வ தகவல்கள் குறித்து பேசுவதற்கு நீண்டகாலமாகவே தடை இருந்துவருகிறது.இப்போது அவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்வதற்கும் அரசாங்கம் கடந்தவாரம் முதல் தடைவித்திருக்கிறது.

பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு நாட்டின் சுமார் 15 இலட்சம் அரச அலுவலர்களுக்கு பிறப்பித்திருக்கும் உத்தரவில் , ” சமூக ஊடகங்களில் அரச அலுவலர் ஒருவர் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு குற்றச்செயலாக அமையும்” என்று  கூறப்பட்டிருக்கிறது.

தற்போதைய படுமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக பாடசாலைப் பிள்ளைகள் பசிக்கொடுமையில் மயங்கிவிழுந்த சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியான பிறகு அரச அதிகாரிகள் சிலர் சமூக ஊடகங்களில் வேதனையை வெளிப்படுத்தி கருத்துக்களை பதிவுசெய்ததை அடுத்தே இந்த புதிய உத்தரவை பிறப்பிக்கவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உணவின்மையால் பாடசாலைகளில் பல  பிள்ளைகள் மயங்கி விழுந்ததாக மாகாண சுகாதார அதிகாரிகளும் ஆசிரியர்களும் கூறியதாக செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்த வண்ணம் இருப்பதை நாம் அறிவோம்.இத்தகைய செய்திகள் அதுவும் அரச அலுவலர்களிடமிருந்து வருவது அரசாங்கத்துக்கு பெரும் அவமானமாக இருக்கிறது போலும்.

கடந்த மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து  ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதங்களில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையப்போகிறது என்று மக்கள் அச்சமடையக்கூடிய வகையில் எச்சரிக்கைகளை இடையறாது செய்துவந்தார். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நிகழ்த்திய உரைகள் பொருளாதார நிலைவரம் குறித்த எச்சரிக்கைகள் நிறைந்தவையாக இருந்தனவே தவிர, அண்மைய எதிர்காலத்தில் நிலைவரத்தில் சிறியளவிலேனும் மேம்பாடு எற்படும் என்ற நம்பிக்கையை தருபவையாக இருக்கவில்லை. மக்களுக்கு பொய்யைக் கூற தான் விரும்பவில்லை என்று தனது எச்சரிக்கைகளை அவர் நியாயப்படுத்தவும் செய்தார்.

ஆனால், ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் பொருளாதார நிலைவரம் குறித்த அவரது அபாய அறிவிப்புக்களில் சிறிய தணிவைக்காணக்கூடியதாக இருக்கிறது. சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் உதவி வழங்கும் நாடுகளுடனும் தனது அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்து மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. எதிர்கால சந்ததிகளுக்கு அபிவிருத்தியடைந்த நாடொன்றை உருவாக்குவதே தனது பணி என்று அடிக்கடி கூறும்  ஜனாதிபதி சமகாலச் சந்ததி பட்டினி கிடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ?

கூரையை பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துசெல்லும் விலைவாசியை ஒரு சிறிய அளவிலேனும் கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை. பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்ற சில அத்தியாவசிய பாவனைப்பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒப்பீட்டளவிலான மேம்பாட்டு மற்றும் மின்வெட்டு நேரக்குறைப்பை காண்பித்து  வழமை நிலை திரும்புகிறது என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஆனால், உயர்ந்த விலைகளில் அந்த பொருட்களை அதிகப்பெரும்பான்மையான மக்களினால் வாங்க முடியவில்லை.பொருளாதார நெருக்கடி நிலைவரத்தில் மாற்றம் என்பதோ அல்லது சிறியளவிலான மேம்பாடு என்பதோ மக்களின் அன்றாட வாழ்வின் இடர்பாடுகளில் ஏற்படக்கூடிய தணிவில் பிரதிபலிக்கவேண்டும். அத்தகைய ஒரு அனுபவத்தை வசதி படைத்த குறிப்பிட்ட சில பிரிவினரைத் தவிர, பெரும்பான்மையான மக்களினால் பெறமுடியவில்லை  என்பதே உண்மை.

மக்கள் அனுபவிக்கின்ற இடர்பாடுகளைக் கண்டு வேதனைப்படும் அரச அலுவர்களை சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்யக்கூடாது என்று தடுப்பதன் மூலம் அரசாங்கம் முழுப்பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைக்கமுடியாது. சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் அனுபவிக்கின்ற அவலங்களை அப்படி ஒன்றும் இல்லை என்று  நிராகரிப்பதை விடுத்து ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும்.நிராகரிப்புகள் உண்மை நிலையை மறைத்துவிட முடியாது.

மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கப்போகிறார்கள் என்ற ஒரு உண்மையை மட்டும் அரசாங்கம் ஒத்துக்கொள்கிறது போலும். அதனால் தான் மீண்டும் மக்கள் கிளர்ச்சி மூளுவதை தடுப்பதற்கான வழிமுறைகளில் அது தீவிர கவனம் செலுத்துகிறது ; அதிலும் கூட நிதானமாக இல்லாமல் தவறான அணுகுமுறைகளை கையாளுகிறது.கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் உயர்பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒரு சில தினங்களில் வாபஸ் பெறப்பட்டமை இதற்கு நல்ல உதாரணம்.

பொருளாதார நெருக்கடியால்  மக்கள் 2021 பிற்பகுதியில் இருந்து பெரும் கஷ்டங்களை அனுபவித்துவருகிறார்கள். வெளிநாட்டு செலாவணி கையிருப்பு வற்றிப்போனதும்  அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்தினால் முடியாமல் போன நிலையில் பாரிய தட்டுப்பாடுகள் ஏற்பட்டன.  பணவீக்க வீதத்தை பொறுத்தவரை உலகில் சிம்பாப்வேக்கு அடுத்ததாக இலங்கை இருக்கிறது என்று கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்த காரணத்தால் சாதாரண மக்கள் தங்களது வழமையான உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டம் அதன் பிந்திய அறிக்கையில் 60 இலட்சம் இலங்கையர்கள் – சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் — உணவுப்பாதுகாப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறியிருக்கிறது.

சனத்தொகையில் 74 சதவீதமானவர்கள் வழமையாக விரும்பிச் சாப்பிடாத உணவுவகைகளை நாடுதல், உணவின் அளவைக் குறைத்தல், உணவு வேளைகளை குறைத்தல் என்று ‘ சமாளிக்கும் தந்திரோபாயங்களை ‘ கடைப்பிடிக்கிறார்கள் என்றும் உலக உணவுத்திட்டம் கூறியிருக்கிறது.

சத்துணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் பிரச்சினை இன்று பூதாகாரமானதாகிவிட்டது. அது பற்றிய உலக நிறுவனங்களின் விபரங்களை அமைச்சர்கள் சிலர் நிராகரிப்பதற்கு கூட துணிச்சல் கொள்கிறார்கள்.

சிறுவர்களின் சத்துணவுப் பற்றாக்குறைப் பிரச்சினை பற்றிய முறைப்பாடுகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ‘ அரசியல் நோக்குடன் ‘ செயற்படும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என்று அண்மையில் நிராகரித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள  பாடசாலையொன்றில் ஒரு பிள்ளை மதிய உணவாக தேங்காய் வழுவலை கொண்டுவந்ததாக செய்திகள் பெரிதாக வெளிவந்தன. அந்த பிரதேச கல்வித்துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.

அமைச்சர் ரம்புக்வெல சபைக்குள் இருந்து சம்பந்தப்பட்ட அந்த பாடசாலையின் அதிபருடன் தனது தொலைபேசியில் தொடர்புகொண்டு எந்த பிள்ளையும் மதிய உணவாக தேங்காய் வழுவலை கொண்டுவரவில்லை என்று அவர் மறுமுனையில் இருந்து கூறியதை  பாராளுமன்ற உறுப்பினர்கள்  கேட்கக்கூடியதாக ஒலிபரப்பினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்குள் உரையாற்றமுடியுமே அன்றி வெளியில் இருந்து எவரும் சபைக்கு உரையாற்ற முடியாது என்று நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கும் ரம்புக்வெலவை சபாநாயகர் கடிந்துகொள்ள வேண்டியதாயிற்று.

அமைச்சரின் அறியாமையால் ஒரு பாடசாலை அதிபரும் பாராளுமன்றத்தில் தனது குரலை கேட்கச் செய்யக்கூடியதாக இருந்த விசித்திரம்.நிச்சயமாக அது ஹன்சார்ட்டில் இடம்பெற்றிருக்காது என்று நம்பலாம்.

அந்த பிள்ளை தேங்காய் வழுவலை தனது சாப்பாட்டு பெட்டிக்குள் கொண்டுவந்ததா இல்லையா என்ற உண்மையை நாம் அறிய வாய்பில்லை. அந்த கதை அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.

ஆனால், நாடளாவியமட்டத்தில் மக்களின் உணவுப்பாதுகாப்பு பிரச்சினையையும் சிறுவர்களின் சத்துணவுப் பற்றாக்குறையையும் அமைச்சர் பெருமக்களினால் அமுக்கிவிடமுடியாது.

இலங்கையில் சிறுவர்கள் மத்தியிலான சத்துணவுப் பற்றாக்குறை பற்றி ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் ( யூனிசெவ் )அண்மையில் வெளியிட்ட அறிக்கை தவறான விபரங்களைக் கொண்டிருக்கிறது என்றும் தனது அமைச்சினால் வெளியிடப்பட்ட விபரங்கள் சத்துணவுப் பற்றாக்குறை நிலைவரத்தில் தெளிவான மேம்பாடு ஏற்பட்டிருப்பதை காட்டுகின்றன என்றும் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார்.

யூனிசெவ் அறிக்கையின் பிரகாரம் வழமையான உணவுவகைகளை அதிகரித்த விலை கொடுத்து வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் தங்களது கிரமமான உணவுகளை தவிர்க்கின்றன ; அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது நிச்சயமற்ற நிலையில் சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்கு போகிறார்கள் ; இலங்கையில் சுமார் 50 சதவீதமான சிறுவர்களுக்கு ஏற்கெனவே சிலவகை அவசரகால உதவி தேவைப்படுகிறது ; பிரதானமாக வறுமையின் விளைவாக 10,000 க்கும் அதிகமான சிறுவர்கள் ஏற்கெனவே  நிறுவன ரீதியான  பராமரிப்பில் இருக்கிறார்கள்.

உலக உணவுத்  திட்டத்தின் விபரங்களின் பிரகாரம் பத்து இலங்கையர்களில் மூவர் – 63 இலட்சம் பேர் – மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ; இவர்களில் கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள், ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோரும் அடங்குகிறார்கள். 34 இலட்சம் மக்களுக்கு உணவு உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய உலக உணவுத்திட்டம் நடவடிக்கைகளை எடுக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு சனத்தொகையில் 9 சதவீதத்தினரே உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டனர். அது  இவ்வருடம் ஜூனில் 28 சதவீதமாக அதிகரித்து இப்போது 37 சதவீதமாக நிற்கிறது என்றும் விலைவாசி அதிகரிப்பு காரணமாக மூன்று குடும்பங்களில் ஒன்று போதுமான உணவின்றி தவிக்கிறது என்றும் உலக உணவுத் திட்டம் கூறுகிறது.மோசமான உணவு அனர்த்தத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் 45 நாடுகளில் இலங்கையும் அடங்குகிறது.

23  இலட்சம் சிறுவர்கள் உட்பட 57 இலட்சம் மக்களுக்கு அவசரமாக உணவு ஆதரவு தேவைப்படுகிறது ; ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 15.7 சதவீதமானோர் சத்துணவுப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ; இவர்கள் பட்டினி மரண ஆபத்தையும்  எதிர்நோக்குகிறார்கள் ; தெற்காசிய நாடுகள் மத்தியில் சத்துணவுப் பற்றாக்குறையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது ; இந்த நிலைவரம் 2022 அக்டோபர் தொடக்கம் 2023 பெப்ரவரி வரை மேலும் மோசமடையும் என்று யூனிசெவ் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லார்ஜீ – அட்ஜீ  கூறுகிறார்.

இது இவ்வாறிருக்க, குடும்ப சுகாதார பணியக ஆலோசகர் வைத்திய கலாநிதி கௌசல்யா கஸ்தூரியாராச்சி சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம் ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களி்ல் 14.6 சதவீதமானோர் வயதுக்கேற்ற நிறையைக் கொண்டவர்களாக இல்லை. ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் மத்தியிலான நிறைக்குறைவைப் பொறுத்தவரை நுவரேலியா மாவட்டமே உயர்ந்த வீதத்தைக்(21) கொண்டிருக்கிறது.வவுனியாவில் இது  19.9 சதவீதமாகவும் அம்பாறையில் 18.5 சதவீதமாகவும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 32 இலங்கையர்கள்  வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

தவறான ஆட்சிமுறையின் விளைவான பொருளாதார நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்ட மனிதாபிமானப் பிரச்சினை இவ்வாறாக பரிதாபகரமானதாக இருக்கும்போது அரசாங்க அரசியல்வாதிகள் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாமல் சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகளில் குறைகண்டு பிடிப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். மறுபுறத்தில் அரச அலுவலர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை  வெளியிட அரசாங்கம் தடை விதிக்கிறது. இது அடிப்படையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மறுதலிக்கும் செயலாகும்.

உலகம் இலங்கை  நிலைவரத்தை பரிதாபமாக பார்ப்பதை எண்ணி அரசாங்கம் வெட்கப்படவேண்டுமே தவிர சமூக ஊடக பதிவுகளால் அவமானம் ஏற்படுகின்றது என்று தீக்கோழி மனோபாவத்துடன் செயற்படக்கூடாது.

வீரகத்தி தனபாலசிங்கம்