சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனி நாட்டு தேரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், புன்னகுடா பிரதேசத்தில் உள்ள புஞ்சாராம விகாரையில் கடமை புரிந்து வந்த ஹிக்கடுவ புஞ்சரதன (72) தேரரே உயிரிழந்திருப்பவர் என்று தெரிய வந்துள்ளது.
தேரர் ஆவதற்கு முன்னர் அவருடைய பெயர் Rolf Wermer என்று எமது செய்தியாளர் கூறினார்.
உயிரிழந்துள்ள தேரர் அடிக்கடி மாரவில பிரதேசத்திற்கு சென்று குறித்த விடுதியில் தங்கக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி குறித்த விடுதிக்கு சென்று தங்கியுள்ள அவர் 14ம் திகதியான போதும் வெளியில் வராததால் தேடிப்பார்த்த போது, அவர் அறையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் மாரவில பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மரண பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தேரரின் உயிரிழப்பு தொடர்பில் ஜேர்மன் நாட்டு தூதுவராலயத்திற்கு அறிவிப்பதற்கு மாரவில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

