கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து 38 பேர் கடற்படையினரால் மீட்பு

91 0

கற்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டிருந்த இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கற்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவவிற்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் இருந்த 38 பேரை இவ்வாறு மீட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் கடல் போக்குவரத்திற்காக பதிவு செய்யப்பட்ட இழுவை படகு ஒன்றில் ஒரு குழுவினரை ஏற்றிச் செல்லும் போது அதில் கடல் நீர் கசிவு ஏற்பட்டதால்  குறித்த படகு  மூழ்கும் அபாயத்தில் இருந்துள்ளது.

பயணிகள் படகு உரிமையாளரால் வடமேற்கு கடற்படையினருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியமைக்கு அமைவாக உடன் விரைந்து செயற்பட்ட  இலங்கை கடற்படை  மற்றும்  கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்ட  கரையோர ரோந்துக் கப்பல்களை  துரிதமாக செயற்படுத்தி அவர்களை மீட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது படகிலிருந்து 32 ஆண்களையும் ( படகு செலுத்திய 03 பேர் உட்பட) மற்றும் 06 பெண்களையும் விபத்திற்குள்ளான இழுவை படகில் இருந்து மீட்டு பாதுகாப்பாக கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.