திறக்கப்படும் புதிய களம்

45 0

“உயர்பாதுகாப்பு வலய விவகாரம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பெரும் சவாலாகவும், சறுக்கலாகவும் அமைந்து விட்டது”

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று மூன்று மாதங்களுக்குப் பின்னர், காலிமுகத்திடலில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட இடம் என்ற அறிவிப்புப் பலகை ஒன்று நாட்டப்பட்டது.

கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால், ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள், குறித்த இடத்தில் அதனை முன்னெடுக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.

அதன் பின்னர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாம் மக்களின் உரிமைகளை மதிப்பதாகவும், அவர்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை நிலை நாட்டுவதற்காக, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, விசேடமாக இடம் ஒன்றை ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஜனாதிபதி செயலகம் முன்பாக, ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட அந்த ஆர்ப்பாட்ட இடம், அண்மையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக- உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயங்களை நியாயப்படுத்தி, கடந்த திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டது தவறான முடிவு என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு உயர்மட்டம் அதுகுறித்து ஆராய்ந்து, அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இராணுவ அதிகாரிகளில், ஜெனரல் கமல் குணரத்னவும் ஒருவர்.

இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இறுதிக்கட்டப் போரை வழிநடத்திக் கொண்டிருந்த போது, களமுனையில் இருந்த சில உயர் அதிகாரிகளுடன், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நேரடித் தொடர்பில் இருந்தார்.

அவர்களுக்கு தனியான கட்டளைகளை அவர் பிறப்பித்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.

போருக்குப் பின்னர், ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட தன்னுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை கோட்டாபய ராஜபக்ஷ முதன்மைப்படுத்தியதுடன், உயர் பதவிகளிலும் அமர்த்தினார்.

ஜனாதிபதியானதும், அவரை பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்திருந்தார்.

ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதுதான், ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

அதனைத் தான் இப்போது அவர் தவறான முடிவு என்று கூறியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆர்ப்பாட்ட உரிமைகளை எந்தளவுக்கு மதித்தார் என்ற கேள்விகள் உள்ளன.

அவர் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு தயங்கினார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் போராட்டங்களை அவர் முற்று முழுதாக சகித்துக் கொண்டார், என்றோ, அதற்குரிய இடத்தை வழங்கினார் என்றோ கூறமுடியாது.

போராட்டங்களை அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் ஈடுபட்டிருந்தால், இன்னும் வேகமாக அவர் தூக்கியெறியப்பட்டிருப்பார்.

ஏனென்றால், மக்கள் எரிபொருள், உணவு, எரிவாயு தட்டுப்பாடுகளால் திணறிக் கொண்டிருந்தனர்.

அவ்வாறான நேரத்தில், போராட்டங்களின் மீது வன்முறைகளை பிரயோகித்திருந்தால், அது மோசமான எதிர்விளைவுகளை எற்படுத்தியிருக்கும்.

ஆளும்கட்சியாக இருந்த பொதுஜன பெரமுன வன்முறைகளை தூண்டி விட்டதன் விளைவாக பெரும் கலவரங்கள் ஏற்பட்டமை நினைவிருக்கலாம்.

இப்போது ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமைகளை மறுக்கிறது. அதற்கான இடத்தையும் பறித்துக் கொள்ளப் போவதாக கூறியிருக்கிறது.

அடிப்படைச் சுதந்திரங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை.

இலங்கையில் அது எப்போதுமே கேள்விக்குறியாகத் தான் இருந்து வந்திருக்கிறது. அல்லது இடம், சூழல், இனம் போன்ற காரணிகளுக்கு உட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

முன்னர் அரசாங்கத்துக்கு எதிராக வடக்கில் போராட்டங்களை நடத்த முடியாமல் இருந்தது.

உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி காணிகளை விடுவிக்குமாறு, தெல்லிப்பளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றிருந்த போது, தான் இராணுவப் பலனாய்வாளர்கள் அவர்களைத் தாக்க முயன்றதுடன் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக,ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொழும்பிலும் அவ்வாறு தான், நோர்வேக்கு, எதிராக, ஐ.நாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தக் கூடிய நிலை இருந்தாலும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.

அவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர். இப்போது, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.

முக்கிய அரசாங்க கட்டடங்களையும், அதிகாரிகளையும் பாதுகாப்பதற்காக, உயர் பாதுகாப்பு வலயம் பிரகடனமும் பிரகடனம் செய்யப்பட்டது.

எனினும், கடும் எதிர்ப்பு மற்றும், உயர்பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சட்டத்தின் சட்டபூர்வத் தன்மையை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவற்றையடுத்து, அரசாங்கம் பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடம் அகற்றப்படவுள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் 6 மணி நேரத்துக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயகத்துக்கும், அடிப்படை உரிமைகளுக்குமான வெளி குறைந்து கொண்டே செல்கிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முற்றாகவே அடக்கி ஒடுக்கும் போக்கு தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.

உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் இன்னொரு மக்கள் கிளர்ச்சிக்கு வழி வகுக்கலாம் என்று எச்சரித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதேவேளை, இரண்டாவது ‘அரகலய’ தொடங்கி விட்டதாகவும், வரும் நாட்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையப் போவதாகவும், சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏரங்க குணசேகர  கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின், இன்னொரு மக்கள் போராட்டத்துக்கான வழிகளைத் தான் ரணில் விக்கிரமசிங்க திறந்து கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்க பாடம் கற்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்க நிர்வாகத்தைக் கையாண்ட விதத்தில் தவறுகள் இருந்தன.

ஆனால், மக்களின் எதிர்ப்புகளைக் கையாளுவதில் அவர் நிதானமாகவே இருந்தார், அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தால், பெரும் இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும்.

பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, கோட்டாபய ராஜபக்ஷ சரியாகவே செயற்பட்டார் என்றும், அப்போதிருந்த துணிச்சல் அவர் ஜனாதிபதியான பின்னர் இருக்கவில்லை. அவர் மென்மையானவராக மாறி விட்டார், அதனால் தான், ஆட்சியை இழக்க நேரிட்டது என்று மஹிந்த ராஜபக்ஷவே கூறியிருக்கிறார்.

அதாவது கோட்டாபய ராஜபக்ஷவிடம், அவர்கள் பழைய கடும் போக்கைத் தான் எதிர்பார்த்தனர்.  ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

அந்தக் குறைபாட்டை அவர்கள், ரணில் விக்ரமசிங்கவைக் கொண்டு நிறைவேற்றுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க மென்போக்கானவர் என்று பெயரெடுத்தவர்.

அவர், இப்போது சர்வாதிகாரி என்று பெயர் எடுக்கும் அளவுக்கு மாறிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்ப்பு போராட்ட உரிமைகளை நசுக்குவதன் மூலம் அவர் ஆட்சியைப் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறார்.

ராஜபக்ஷவினருக்குத் தேவையான வகையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தனது அரசாங்கத்தின் ஆயுள் காலத்தை நீடிக்க முயற்சிக்கிறார்.

அதற்காக மக்களின் சுதந்திரத்தை ஒவ்வொன்றாக நசுக்குவதற்கும் அவர் தயாராகி விட்டார். உயர்பாதுகாப்பு வலய விவகாரம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பெரும் சவாலாகவும், சறுக்கலாகவும் அமைந்து விட்டது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால், சோசலிச மாணவர் சங்கம் கூறுவது போன்று- இரண்டாவது அரகலயவுக்கும், மைத்திரிபால சிறிசேன கூறுவது போன்று இன்னொரு மக்கள் கிளர்ச்சிக்கும் வெகுதூரம் இருக்காது போலவே தெரிகிறது.

கார்வண்ணன்