பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி அவதானம்

91 0

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். நாட்டு மக்களுக்கு பாராளுமன்றம் மீது நன்மதிப்பு கிடையாது.

ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல ஆதரவு வழங்குவோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை தடுக்க பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நாட்டு மக்கள் கடுமையாக வெறுக்கும் பின்னணியில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் கிடையாது.பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் கடுமையான அழுத்தத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சரவையினையும் விஸ்தரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை வெறுக்கத்தக்கதாகும்.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை.பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேசிய சபையின் செயற்பாடுகள் குறித்து தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ள நிலையில்  பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பாராளுமன்றம் மீது நன்மதிப்பு கிடையாது,ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல ஆதரவு வழங்குவோம் என்றார்.