பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம்

96 0

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தண்டவாளங்களை சர்வதேச விலைமனுகோரல் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (21) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எதிர்தரப்பின் உறுப்பினர் அசோக அபேசிங்க முன்வைத்த வாய்மொழி மூலமான வினாவுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொல்கஹாவெல-குருநாகல் புகையிரத பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் எப்போது நிறைவு பெறும் என்பதை குறிப்பிட முடியாது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியினால் அரச முறை கடன் மீள் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் அரச முறை கடனை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்காரணிகளினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான முதலீட்டு தவணை ஒதுக்கீடும் தாமதப்படுப்பட்டுள்ளன. பொல்கஹாவெல- குருநாகல் இரட்டை வழி  புகையிரத பாதை அபிவிருத்திக்கான நிதியுதவியும் அவ்வாறே தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய நிதியை கொண்டு இந்த அபிவிருத்தி பணியை முன்னெடுக்கவும் முடியாது. நாணயத்தை அச்சிட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளத்தை செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது.

புகையிரத சேவையினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான அடிப்படை கருவிகளை இறக்குமதி செய்ததிலும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள புகையிரத தண்டவாளங்களை சர்வதேச விலை மனுகோரலுக்கமைய விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.