நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டு நிலைமையை சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களும் நிர்வகித்து வருவதாகவும், அடுத்த மாதத்திற்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும், அவை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நிலைமையில் இல்லை என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் முன்னணி மருந்து நிறுவனமான சி.சி.எல். நிறுவனம் , இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக , இலங்கை – பாக்கிஸ்தான் நட்புறவு அமைப்பின் மூலம் , நாட்டின் மருத்துவத்துறைக்கு தேவையான 100 இலட்சம் பெறுமதியுடைய நீரழிவு நோயாளர்களுக்கான மருந்து பொருட்களை வழங்கியுள்ளது. இவற்றை சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாசாத் சௌத்ரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கைக்கு தேவையான மருந்துகள் நட்பு நாடுகள் பலவற்றிடமிருந்தும் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெறுகின்றன. அதற்கமைய மருந்து தட்டுப்பாடுகள் சுமூகமான வகையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது.
உலகளாவிய கொவிட் தொற்று மற்றும் ஏனைய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த சவால்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்றோம்.
நாட்டுக்கு மருந்துகளை கொண்டு வரும் சாதாரண கொள்முதல் நடவடிக்கையில் செலவிடும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதன் மூலம் மேலதிக மருந்து முகாமைத்துவத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். இந்த இக்கட்டான தருணத்தில் இவ்வாறான மருந்துகளை வழங்குவதற்கு கைகோர்த்த பாகிஸ்தான் அரசாங்கம், அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனம், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களுக்கு பாகிஸ்தான் அரசும் அதன் நிறுவனங்களும் அளித்து வரும் ஆதரவை எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் மிகவும் திறமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

