அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை அரசாங்கம் ஸ்தாபிக்கவுள்ளமை நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே கருத வேண்டும். பொதுஜன பெரமுன இன்றும் குறுகிய நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு செயற்படுகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
தேசிய சபை தொடர்பில் வினவிய போது போது மேற்கண்டவாறு குறிப்பி;ட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு உண்மை தன்மையுடன் செயற்பட்டார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ குறைகளை மாத்திரம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாரே தவிர சவால்களை பொறுப்பேற்க அவர் தற்துணிவுடன் செயற்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவரின் பலவீனத்தை ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக பாராளுமன்றம் வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ காட்டிய அக்கறையை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க செலுத்தவில்லை.சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுன ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக பொதுஜன பெரமுன சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதை முழுமையாக இல்லாதொழித்து தனது கட்சி ஆதிக்கத்தில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் அரசாங்கம் தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை ஸ்தாபிக்கவுள்ளமை நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே கருத முடியும்.தேசிய சபை ஊடாக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்றார்.

