கோட்டாவைப் போன்ற அரச தலைவர் இனியொருபோதும் கிடைக்கப்போவதில்லை

165 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்க வேண்டும் என்று முன்னின்று செயற்பட்டவர்கள் தமது இறுதி காலத்தில் நிச்சயம் அது குறித்து எண்ணி கவலையடைவர்.

ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டிருந்த போது , அவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் 500 – 1000 பேர் உயிரிழந்திருப்பர் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் முன்னின்று செயற்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி கால கட்டத்திலாவது அதனை எண்ணி துன்பப்படுவர்.

காரணம் அவரைப் போன்றதொரு அரச தலைவரை இனியொருபோதும் எம்மால் காண முடியாது. ஒரு சதமேனும் ஊழல் மோசடியில் ஈடுபடாத தலைவராகவே அவர் காணப்படுகின்றார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு பாதள உலகக்குழு உறுப்பினரைக் கூட நாம் பார்க்கவில்லை. துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறவில்லை.

அன்று ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்து , அவரை தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்ட போது முப்படையினர் அவருடனேயே இருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் குறைந்தது 500 – 1000 பேர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு நபருக்கும் சிறிதளவேனும் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றே கூறினார்.

தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத கட்சி , வன்முறைகளில் ஈடுபட்டு வீடுகளை தீயிட்டுக் கொழுத்தி ஆர்ப்பாட்டங்களை முற்றாக சீரழித்தது.

தற்போது நாட்டு மக்களை இதனை உணர்ந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் ஹைட் பார்க்கில் ஒன்று கூடியிருந்தனர்.

அதற்கு மக்கள் விடுதலை முன்னணியே தலைமைத்துவம் வகித்தது. எனினும் அங்கு 300 கதிரைகளில் கூட பொது மக்கள் காணப்படவில்லை.

எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வந்து , ஏற்கனவே சென்றதைப் போன்று முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என்றார்.