பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான மதிய உணவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்

107 0

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதி உதவியுடன் 18 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான மதிய உணவை வழங்குவதற்கு விவசாய அமைச்சு  தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள், உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியன காரணமாக பாடசாலை மாணவர்களின் போஷாக்குக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் போஷாக்குமிக்க உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதற்காக 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை  ஆகியன இணைந்து போஷாக்குமிக்க மதிய உணவை வழங்கும் வேலைத்திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் இந்த மதிய உணவுக்கு போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கிய போஷாக்கான பகல் உணவு வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களின் போஷாக்குமிக்க உணவுக்காக நாளொன்றுக்கு தேவையான அரிசியின் அளவு 82 மெற்றிக் டொன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதற்கான அரிசியை நெல் விநியோக சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் இணக்கம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த தீர்மானத்தை தெரிவித்திருந்தார்.