சாவகச்சேரி இந்து டக்சிதாவுக்கு தங்கம்

87 0

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது சிரேஷ்ட ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் போட்டியில் இரண்டாம் நாளான நேற்று (14)  வடக்கு மற்றும் மலையக வீரர்கள் தங்கம் உட்பட பதக்கங்கள் வென்று அசத்தினர்.

22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.10 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

டக்சிதாவின் தனிப்பட்ட சிறந்த பெறுதி 3.40 மீற்றராக இருந்தபோதிலும் இரண்டு வயதுப் பிரிவுகளுக்கு ஏககாலத்தில் போட்டி நடத்தப்பட்டதாலும்  போட்டி  காலை 8 மணிக்கு ஆரம்பமாகி 4 மணித்தியாலங்கள் நீடித்ததன் காரணமாகவும் ஏற்பட்ட களைப்பு மிகுதியால் அவரால் அசிறந்த உயரப் பெறுதியைப் பதிவு செய்ய முடியாமல் போனதாக பயிற்றுநர் கனாதீபன் தெரிவித்தார்.

எனினும் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள தேசிய திறன்காண் போட்டியில் பங்குபற்றவுள்ள டக்சிதா சிறந்த உயரப் பெறதியைப் பதிவு செய்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதே போட்டியில் பங்குபற்றிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சரத்குமார் சானுஜா (2.60 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மகாஜான கல்லூரியைச் சேர்ந்த சந்திரகுமார் தீபிகா (3.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் யாதவராசா எலஸ்டிஜா (2.90 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரகுமார் துஷாந்தன் (தீபிகாவின் இளைய சகோதரர்) வெள்ளிப் பதக்கத்தை (3.90 மீற்றர்) வென்றெடுத்தார்.

கோலூன்றிப் பாய்தலில் பல வருடங்களாக கோலோச்சி வரும் மகாஜனா கல்லூரி சார்பாக தற்போது பங்குபற்றிவரும் வீர, வீராங்கனைகள் பழைய கோல்களைப் (Pole) பயன்படுத்துவதால் அவர்களது உயரப் பெறுதிகள் எதிர்பார்த்த மட்டத்தை எட்டாமல் இருப்பதாக பயிற்றுநர் சுபாஷ்கரன் தெரிவித்தார்.

புதிய கோல்களின் விலை அதிகரித்துள்ளதால் அவற்றை கொள்வனவு செய்வது சிரமமாக இருப்பதாகவும் நவீன கோல்களைக் கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் நவீன கோல்களை கொள்வனவு செய் ய  உதவினால் புதிய கோல்களைக் கொண்டு  தமது வீர, வீராங்கனைகள் இதனை விட சிறப்பான உயரப் பெறுதிகளைப் பதிவு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை வீரர் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அகில இலங்கை பாடசாலைகள் மட்டத்தில் முதல் தடவையாக இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய துதிஹர்ஷிதன் அப் போட்டியை 6 நிமிடங்கள் 22.18 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

துதிஹர்ஷிதனிடம் திறமை இருப்பதாகக் குறிப்பிட்ட பயிற்றுநர் சம்பத், எதிர்காலத்தில் அவர் தேசிய மட்டத்தில் பிரகாசிக்க கூடியவர் என தெரிவித்தார்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியைச் செர்ந்த எம்.ஏ.எம். அப்பாத் 12.72 மீற்றரைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.