இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகமே சாவகச்சேரி தற்கொலை அங்கி!

266 0

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று அந்த சந்தேகத்திற்குரிய வெடிப்பொருட்கள் காவல்துறையினருக்கு கிடைத்து 5 நிமிடங்கள் நிறைவடைவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அது தொடர்பில் டுவிட்டர் பதிவு செய்திருந்தார்.

குறித்த தற்கொலை  அங்கி வெள்ளவத்தை பிரதேசத்திற்கு அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்தியதெனவும், அரசாங்கம் இந்த வெடிப்பொருட்களின் அளவை குறைத்து கூறுவதாகவும், வெடிப்பொருட்கள் கிடைத்து ஊடகங்களில் செய்தி வெளியாகுவதற்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை வைத்து முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரினால் இது தொடர்பில் அவரிடம் விசாரித்த போது தன்னை அவ்வாறு கூறுமாறு கூறியது தினேஷ் குணவர்தன என ஜீ.எல் குறிப்பிட்டிருந்தார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் காவல்துறை குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் காவல்துறை பயங்கரவாத விசாரணை பிரிவு இணைந்தே விசாரணை மேற்கொண்டது.

அவர்களின் இந்த விசாரணையின் போது தற்கொலைபடை அங்கி மற்றும் வெடிப்பொருட்களின் முக்கியஸ்தர் பிரான்ஸில் வாழும் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தகவல் வெளியாகியது.

எனினும் அது தொடர்பில் ஆராய்ந்த போது அவர் வேறு யாரும் அல்ல இராணுவ புலனாய்வு பிரிவினரால் பிரான்ஸில் தங்க வைக்கப்பட்ட உளவு வழங்கும் நபராகும்.

அவருக்கான கொடுப்பனவுகள் இராணுவத்தினரின் இரகசிய நிதியின் ஊடாகவே வழங்கப்படுகின்றது. இந்த தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொகையினை குறித்த வீட்டில் வைத்துக் கொள்வதற்காக வீட்டின் உரிமையாளருக்கு மாதாந்தம் 2 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அந்த கொடுப்பனவும், இராணுவத்தினரின் இரகசிய நீதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது.

பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வாவினால் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த விசாரணையை உடனடியாக நிறுத்துமாறு மைத்திரிபால சிறிசேன காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடைப்பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவில் ராஜபக்சர்களுக்கு தொடர்புடைய சூழ்ச்சியாளர்கள் உள்ளமையினால் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகிக் கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியினால் விசாரணைகளை நிறுத்துமாறு கூறுவது முற்றிலுாமான முட்டாள்தனமான செயல் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடற்படை தளபதி ரவிந்திர விஜேரத்ன, பொலிஸ் மா அதிபர், சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் குற்றங்களுக்கு தொடர்புடைய கடற்படை அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நிறுத்துமாறு ஜனாதிபதியினால் மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.