சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான பங்கேற்புடன் காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
“நிலைபேறான சமூக அபிவிருத்திக்கு சூழலைப் பொருளாதார மூலதனமாக்குவோம் அதற்காக பாடுபடுவோம்” எனும் தொனிப் பொருளின் கீழ் பனை விதை நடுகை விசேட செயற்திட்ட வாரம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்சேனை அம்மன் குளத்தை அண்டிய நிலப்பரப்பில் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒரு இலட்சம் பனம் விதைகளை நடும் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய்க்கு ஒரு பனம் விதை என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு நாட்டப்படுவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

