நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக நெருக்கடிகளால் அடித்தட்டு மக்களை காட்டிலும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை பெறுகின்ற போதிலும், நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர்தொழிற்துறைகளை இழந்து பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் (ஒன்று கூடுவோம் இலங்கை) அமைப்பின் தலைவர் பிரசான் டி வீசர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பு கடந்த வெள்ளியன்று கொழும்பிலுள்ள வொண்டர் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘மனிதாபிமான நெருக்கடிக்கான துயர் நீக்கம் பணி’ (Humanitarian Crisis Response) எனும் கருப்பொருளின் கீழ் சமூக நலன் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்புடன் பவுண்டேசன் ஒப் குட்நெஸ், லீட்ஸ் ஆகியன சமூக நல அமைப்புகள் கைக்கோர்த்துள்ளன. ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பின் தலைவர் பிரசான் டி வீசர், பவுண்டேசன் ஒப் குட்நெஸ் அமைப்பின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் சுவன்த்திரி ஜயவர்தன, லீட்ஸ் அமைப்பின் திட்ட முகாமையானர் ஜூட் பெரேரா, ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பின் அதிகாரிகளான விஷ்னி வின்சென்ட், லக்மால் சந்தீப்ப ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக www.grassrootsunites.lk எனும் புதிய இணையத்தளமொன்று இந்நிகழ்வின்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இது குறித்து ஸ்ரீ லங்கா யுனைட்ஸ் அமைப்பின் தலைவர் மேலும் கூறுகையில்,
“இந்த இணையத்தளம் ஊடாக உதவிகளை பெற விரும்புவோர், உதவிகளை செய்ய விரும்புவோர் மற்றும் உதவி தேவைப்படுவோரின் விபரத்தை அளிப்போர் என ஒவ்வொரு பிரிவினரும் விபரங்கள் அளிக்க முடியும். தங்களுக்கு தேவையான உதவிகள், தங்களால் வழங்கங்கூடிய உதவிகளை www.grassrootsunites.lk இணையத்தளத்திற்கு பிரவேசித்து அளிக்கலாம். இதில் அவர்களது இரகசியத் தன்மை பேணப்படும்.
தற்போது எமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதனால் எமது நாட்டு மக்களும் பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காலத்தை விடவும் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார , சமூக பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். பலருமததமது வாழ்வாதாரங்களையும், தொழில்களையும் இழந்து தவித்து வருகின்றனர். விவசாயிகள் பலரும் விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
அடித்தட்டு மக்களை காட்டிலும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை பெறுகின்ற போதிலும், நடுத்தர மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் தீர்வு எட்டப்பட வேண்டும்.
அத்துடன் எமது நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்காக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்டளவு வெளிநாட்டு நாணயங்களை வங்கிகள் ஊடாக அனுப்பி வைப்பது அவசியமாகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என்றார்.

