பெற்றோலிய உற்பத்திகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு

80 0

பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ள, பெற்றோலிய உற்பத்திகள்  ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக வியாக்கியானம் அளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று ( 9) நிறைவடைந்தன.

உயர் நீதிமன்ற நீதியரசர்  முர்து பெர்ணான்டோ தலைமையிலான,  ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் நேற்றும் இன்றும் நடந்த நிலையிலேயே இவ்வாறு அவை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்படி உயர் நீதிமன்ரின் வியாக்கியானம் மிக விரைவில் சபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கபப்டும் என உயர் நீதிமன்ரம் அரிவித்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக, ஸ்ரீ லங்கா  சுதந்திர சேவையாளர்கள் சங்கமும்,  பெற்றோலிய கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரிகள் சங்கமும்  இந்த மனுக்களை  தாக்கல் செய்துள்ளன. மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன் கிழமை, பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால்,  மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்ஜன வாக்கெடுப்பும் அவசியம் என வியாக்கியாணம் அளிக்குமாறு மனுதாரர்கள் மனுக்களூடாக உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர். .

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  பிரசுரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள்  ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயர் நீதிமன்றில், அதன் அரசியலமைப்பு அனுகூலத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.