13 பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமை முடக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது

86 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்ததை தொடர்ந்து 13 உறுப்பினர்களின் பேச்சுரிமை முடக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது.

எமது பேச்சுரிமையினை பாதுகாக்க அவதானம் செலுத்துமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் 4 குழுவினர் சுயாதீனமாக செயற்படுகின்றார்கள்.3 சுயாதீன குழுக்களுக்கு விவாதத்தின் போது உரையாற்றுகவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது.

ஆனால் 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய எமது குழுவுக்கு நிறைவடைந்த இரு விவாதத்தின் போதும் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ,சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொறடா உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அறிவித்தோம். இருப்பினும் எமது கோரிக்கை குறித்து இதுவரை அவதானம் செலுத்தப்படவில்லை.

கடந்த காலங்களில் குற்றப்பிரேரணைக்கு ஆதரவு வழங்கி காரணத்தினால் காமினி திஸாநாயக்க, லலில் அத்துலத்முதலிய ஆகியோருக்கும் பாராளுமன்றில் இவ்வாறே பேச்சுரிமை மறுக்கப்பட்டது.

அரசியல் ரீதியில் மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படலாம், இருப்பினும் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் எமது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமை மறுக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது. காமினி திஸாநாயக்க மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரின் உரிமையினை பாதுகாக்க அப்போதைய சபாநாயகர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் அவ்வாறே செயற்பட்டார்,ஆகவே அவற்றை எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்.

இவ்விடயம் குறித்து சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை கிடையாது. பாராளுமன்ற முறைமைக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.